சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
உயிர்கள் வாழ்வதற்கு அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றுகுடிநீர். மேற்பரப்பு மற்றும் நிலத்தடிநீர் ஆகியவை குடிநீரின் இரண்டு முக்கிய ஆதாரங்கள். நகர்ப்புறங்களில் குடிநீர் விநியோகம் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டதாக இருக்கிறது பெரும்பாலும் இயற்கையான அல்லது செயற்கையான நீர்த்தேக்கங்கள் போன்ற மேற்பரப்பு தண்ணீர் ஆதாரங்களில் இருந்துவருகிறது. நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பயன்பாட்டு அளவுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால், நீர்மேலாண்மை அமைப்புகள் நீர்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பெரிய மேற்பரப்பு நீர்அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை உருவாக்கி, இயக்கி, பராமரிக்கின்றனர். இருப்பினும், நகர்ப்புறங்களில் உள்ள தனிவீடுகள் குடிநீரைத் தவிர மற்ற நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சொந்த ஆழ்குழாய் கிணறுகள்/திறந்த வெளிகிணறுகளைக் கொண்டுள்ளன. வீடுகளின் அதிக அடர்த்தி காரணமாக இத்தகைய கிணறுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் நிலத்தடிநீரே முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. முற்காலத்தில் மக்கள் குடிநீரை திறந்த வெளிகிணறுகள் மற்றும் குளங்களில் இருந்து எடுத்து பயன்படுத்திவந்தனர்.
ஆழ்துளை கிணறு தொழில் நுட்பத்தின் வருகையாலும், பல்வேறு நீர் அமைப்புகளின் முயற்சியாலும், கிராமப்புற நீர் விநியோகத்தின் சூழ்நிலை கணிசமாக மாறிவிட்டது. பாரம்பரிய முறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கிராமப்புற குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன. ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கிராமப்புற நீர் விநியோகத்தில் சுமார் 85%, நிலத்தடிநீர் ஆதாரங்களில் இருந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த செலவில் அல்லது செலவு இல்லாமல், பராமரிப்புப் பொறுப்புகளில் இருந்து விடுபடுவதால், இந்த நீர்வழங்கல் அமைப்புகளால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நிலத்தடிநீர் ஆய்வில் புதிய போக்குகள், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இயந்திரம் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் கிடைப்பது அதிகரித்ததுடன், விவசாய பயன்பாட்டுக்கான இயந்திரம் பயன்பாட்டிற்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கான அரசின் கொள்கைகளும் இணைந்ததால் விவசாய ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது. குடிநீர் மற்றும் பாசன நோக்கங்களுக்காக நிலத்தடி நீரை அந்தந்த பகுதிகளின் செறிவூட்டும் திறனைத் தாண்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டத்தில் படிப்படியாக சரிவு ஏற்படுகிறது.
நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக சுரண்டுவதால், பல ஆழ்துளைகிணறுகள் பருவகாலமாகவோ அல்லது முழுமையாகவோ வறண்டுவிட்டன. இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய்கிணறுகள் அதிக ஆழத்திற்கு தோண்டப்படுகின்றன. இது சில பகுதிகளில் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது, இது நீர்மட்டத்தை குறைப்பதுடன் அங்குள்ள தண்ணீரில் ஃப்ளூரைடுகள், ஆர்சனிக் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற அபாயகரமான இரசாயனங்களின் அளவு நிணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்க காரணமாகிறது. தொழிற்சாலைகள் மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை மேற்பரப்பு நீர் நீரோடைகள் மற்றும் ஏரிகளில் வெளியேற்றுவது இந்த மேற்பரப்பு நீரை மட்டுமல்ல, நிலத்தடிநீர் நிலைகளையும் மாசு படுத்துகிறது. சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில், நிலத்தடிநீரை அதிகமாகச் சுரண்டுவதால், கடல்நீர் உட்புகுந்து, இப்பகுதிகளில் நிலத்தடிநீர் நிலைகளை உப்புத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது. மேற்கூறிய பிரச்சனைகளை சமாளிக்க எளிய, நம்பகமான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த தொழில் நுட்பங்களை கண்டறிந்து மேம்படுத்துவது அவசியம்.
அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நீர் சேகரிப்பின் பாரம்பரிய நடைமுறைகளை புதுப்பித்தல் ஒரு நல்ல வழியாகும். பெரும்பாலான நகரங்களில், நீர்வழங்கல் துறை பல சிக்கல்களையும் தடைகளையும் எதிர்கொள்கிறது. நகர்ப்புற வளர்ச்சியின் வேகம் மற்றும் நகர்ப்புறங்களில் மக்கள்தொகை அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக நீர் ஆதாரங்கள் மிக அதிகமாக சுரண்டப்படுகின்றன. நகர்ப்புற மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நன்னீர் ஆதாரங்கள் பெருமளவில் எடுக்கப்படுகின்றன. பருவமழை அடிக்கடி பொய்த்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
மேற்பரப்பு நீர்வளங்கள் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போவதால், நிலத்தடிநீர் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது. சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மழை குறைந்த காலங்களில் அடிக்கடி தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும். இது போன்ற காலங்களில் நிலத்தடி நீரைசார்ந்திருப்பது அதிகரித்து வருவதால், நிலத்தடிநீர் மட்டமானது சாதாரண விகிதத்தை விடவேகமாக குறைந்து, கிணறுகள் வறண்டு போதல் மற்றும் சில கடலோரப் பகுதிகளில் உப்புநீர் உட்புகுதல் போன்றவை ஏற்படுகின்றன. நிலத்தடிநீரை அதிகமாக எடுப்பதால் அளவு குறைவதோடு மட்டுமில்லாமல் நீரின்தரம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். திட்டமிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற நிலத்தடி நீரை பிரித்தெடுப்பது கடலோரப் பகுதிகளில் உள்ள நீரியல் சமநிலையை சீர்குலைக்கும், இதன் விளைவாக கடல்நீர் ஊடுருவல் சாத்தியமாகும்.
எனவே, புதுப்பிக்கத்தக்க நீர் மூலங்களை அனைத்து வழிகளிலும் பாதுகாக்கவும், பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மழைநீர் சேகரிப்பு (சுறுழ) மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டல் செய்வது ஒரு எளிய மற்றும் செலவு குறைந்த வழி.
நீரியல் சுழற்சி
ஈரமான நிலத்திலிருந்தும், வளரும் தாவரங்களின் இலை களிலிருந்தும், ஏரிகள் மற்றும் நீர்த் தேக்கங்களிலிருந்தும் நீர் ஆவியாகிறது. இது நீராவியாக அதாவது வாயு வடிவில் காற்றில் கொண்டு செல்லப்படுகிறது. நீராவி உறையும் போது அது வாயுவிலிருந்து திரவ வடிவத்திற்கு மாறி மழையாக விழுகிறது. மழை ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு தண்ணீரை வழங்குகிறது நதிகள் நீரை கடலுக்கு கொண்டு செல்கின்றன. நிலம் மற்றும் கடல்களில் இருந்து தண்ணீர் ஆவியாகி மீண்டும் வளிமண்டலத்தில் சேர்கிறது இந்த செயல் முறை தொடர்ந்து நடைபெறுகிறது. நீர் பூமியிலிருந்து வளிமண்டலத்திற்குச் சென்று மீண்டும் பூமிக்கு, ஒரு நீரியல் சுழற்சியில் செல்கிறது.
நிலத்தடி நீர் இருத்தல்
வெகுசன நம்பிக்கைக்கு மாறாக, நிலத்தடிநீர் இருப்பு ஏரிகள் அல்லது நிலத்தின் உள்ளே இருக்கும் நீரோடைகள் வடிவில் இல்லை. நிலத்தடி நீர், பூமியை உருவாக்கும் மண் அல்லது பாறையின் இடைவெளிகளில் சேமிக்கப்படுகிறது, அவை நிலத்தடி நீர்நிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. நிலத்தில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குக் கீழே, பூமி செறிவுற்றிருக்கிறது, இது நிலத்தடிநீர் மட்டம் என்று குறிப்பிடப்படுகிறது, இதன் ஆழம் சில மீட்டர் முதல் நூற்றுக் கணக்கான மீட்டர் வரை இடத்திற்கு இடம் மாறுபடும். இங்கு எடுக்கப்படும் நிலத்தடி நீர் ஆண்டு தோறும் பெய்யும் பருவ மழையால் மீண்டும் நிரப்பப்படுகிறது.
Back